ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதை எதிர்த்து கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 493 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர். சுந்தரராஜின் வெற்றியை எதிர்த்து கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன் விசாரிக்கபட்டு வந்தது. இதற்கிடையே கட்சித்தாவல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஒட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
தகுதி நீக்கத்தை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து, இந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கிருஷ்ணசாமி தொடர்ந்த தேர்தல் வழக்கை சுட்டிக்காட்டி, ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக டாக்டர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தேர்தல் வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் எனவும், தொகுதிக்கு தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, ஒட்டபிடாரம் தேர்தல் வழக்கு கிருஷ்ணசாமியால் திரும்ப பெறப்பட்டதையடுத்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Discussion about this post