பயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பது குறித்த தனது நிலைப்பாட்டை, சீனா மாற்றும் எனத் தெரிகிறது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், பாகிஸ்தானை சேர்ந்த, ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன், மசூத் அசாருக்கு தொடர்புள்ளதாக இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், மத்திய அரசு கேட்டுள்ளது. ஆனால், மத்திய அரசின் முயற்சிக்கு, சீனா ஒத்துழைக்க மறுத்து வருகிறது.
இந்நிலையில், புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதலில், மசூத் அசார் பின்னணியில் இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து, மசூத்தை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இணைப்பது குறித்த சீனாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சீனாவின் இந்த முடிவு, தனது நெருங்கிய நட்பு நாடான பாகிஸ்தானுக்கு அதிருப்தி ஏற்படுத்தும் என்பதால், அதற்கு முன் தங்கள் முன் உள்ள வாய்ப்புகள் குறித்து சீனா ஆலோசனை நடத்தி வருகிறது.
காஷ்மீரில் நடந்த தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தது தொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சகம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு அனுப்பிய இரங்கல் செய்தி மூலம், இதற்கான அறிகுறிகள் தெரிகிறது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பது தொடர்பாக ஐ.நா.வில் நடக்கும் கூட்டத்தில் சீனா பங்கேற்கும் என்றும், நடுநிலையாக நடந்து கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்துவோம் எனவும் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post