சின்ன தலைவலிக்கு கூட மாத்திரைகளை தேடும் நாம், உடலை பேணுவதில் மெனக்கிடுவதில்லை. நோய்களை விரட்ட யோகாசனம் போதும் என பலருக்கும் இலவசமாக யோகாவை கற்றுக்கொடுத்து வருகிறார் மதுரை சேர்ந்த 14வயது மாணவன் அசாருதீன். இதுதொடர்பான ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…..
இன்றைய அவசர உலகத்தில் வேகவேகமாக ஃபாஸ்ட் புட் உணவுகளை உட்கொண்டு உடல் பருமனான பின் மருத்துவரைத் தேடி மருந்துகளும் மாத்திரைகளும் உட்கொண்டு உடல் எடையை குறைக்க ஜிம்களை தேடி செல்கிறோம். ஆனால் இவையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு நம்முடைய முன்னோர்களின் பாரம்பரியமான கலைகளில் ஒன்றான யோகாசனம், ஒரு சிறந்த மருந்தாகும் என்கின்றார் இந்த 14 வயது மாணவர் அசாருதீன்.
யோகாசனத்தை மருத்துவ ரீதியாகவும் பயன்படுத்த முடியும் என்று கூறும் அசாருதீன், சர்க்கரை நோய்க்கு அர்த்தசலபாசனம், முதுகு வலிக்கு சர்வாங்காசனம் என்று யோகாசனத்தின் முக்கியத்துவம் குறித்து அனைவருக்கும் கற்றுகொடுத்து வருகிறார்.
4ம் வகுப்பு படிக்கும் போதில் இருந்தே யோகா பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், தற்போது 9 வகுப்பு படிக்கும் அசாருதீன் சர்வதேச யோகா போட்டிகளில் பங்கு பெற ஆரம்பித்துவிட்டதாக கூறுகிறார். மாநில அளவிலும், தேசிய அளவிலும், யோகா போட்டியில் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ள அவர், தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் எக்சலெண்ட் விருதையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
2020-ல் இங்கிலாந்து, மலேசியா, தாய்லாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளதாகவும் அதில், நிச்சயமாக மிகப்பெரும் முத்திரைகளை பதிப்பேன் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். யோகா கலையையும் அதன் மருத்துவ நன்மைகளையும் பற்றி 14 வயதிலேயே பலருக்கும் கொண்டு சேர்க்கும் மாணவர் அசாருதீனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Discussion about this post