நடப்பாண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தநிலையில் கடந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதை பார்ப்போம்.
கடந்தாண்டில் தமிழக அரசின் மொத்த வருவாய் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 251 கோடி ஆகும். மொத்த செலவு ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 742 கோடி ஆகும். வரவுக்கும் செலவுக்கும் இடையிலான பற்றாக்குறை 17 ஆயிரத்து 490 கோடி ஆகும்.
இதில் தமிழக அரசுக்கான நிதியாதாரமாக வணிக வரியின் மூலம் 86 ஆயிரத்து 858 கோடி ரூபாயும், வாகன வரியின் மூலம் 6 ஆயிரத்து 211 ரூபாயும், வரியல்லாத வருவாயாக 11 ஆயிரத்து 301 கோடி ரூபாயும், மத்திய அரசின் உதவி மானியங்கள் மூலமாக 20 ஆயிரத்து 626 கோடி ரூபாயும் கிடைத்தது.
இதில் அதிகபட்சமாக பள்ளிக்கல்வித்துறைக்கு 27 ஆயிரத்து 205 கோடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு 17 ஆயிரத்து 869 கோடி, எரிசக்தித்துறைக்கு 13 ஆயிரத்து 964, நகராட்சி நிர்வாகத்துறைக்கு 13 ஆயிரத்து 896 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக சுகாதாரத்துறைக்கு 11 ஆயிரத்து 638 கோடி, நெடுஞ்சாலைத்துறைக்கு 11 ஆயிரத்து 73 கோடி, வேளாண் துறைக்கு 8 ஆயிரத்து 916 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டது. 7 ஆயிரத்து 877 கோடி ரூபாய் காவல்துறைக்கு என்றும், 6 ஆயிரத்து 144 கோடி ரூபாய் வருவாய்த்துறைக்கு என்றும், 5 ஆயிரத்து 611 கோடி ரூபாய் சமூக நலத்துறைக்கு என்றும் நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்டது. உயர்கல்வித்துறைக்கு 4 ஆயிரத்து 620 கோடி, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 3 ஆயிரத்து 207 கோடி, போக்குவரத்துத்துறைக்கு 2 ஆயிரத்து 717 கோடி, நீர்வள ஆதாரத்துறைக்கு 5 ஆயிரத்து 127 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதேபோன்று கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கென ஆயிரத்து 240 கோடி ரூபாயும், கால்நடைப் பராமரிப்புத்துறைக்கென ஆயிரத்து 227 கோடி ரூபாயும், நீதி நிர்வாகத்துறைக்கென ஆயிரத்து 197 கோடி ரூபாயும், மீன்வளத்துறைக்கென ஆயிரத்து 16 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதுமட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் நலத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சிறு-குறு-நடுத்தர தொழில்கள் மேம்பாட்டுத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, பழங்குடியினர் நலத்துறை, சிறைத்துறை, கைவினை மற்றும் கதர்த்துறை, இளைஞர் நலன்&விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சுற்றுலா மேம்பாட்டுத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, பால்வளத்துறை, தமிழ் வளர்ச்சித்துறைக்கு என்றும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
துறைகளுக்கு மட்டுமல்லாது ஒவ்வொரு திட்டத்திற்கு என்றும் குறிப்பிட்ட அளவிலான நிதியும் தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. அதன்படி அரசு ஊழியர் ஓய்வூதியத்திற்காக மட்டும் 25 ஆயிரத்து 362 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் உணவு மானியங்களுக்காக 6 ஆயிரம் கோடி ரூபாயும், சமூக பாதுகாப்பு உதவித்தொகை திட்டத்திற்காக 3 ஆயிரத்து 881 கோடி ரூபாயும், ஊரக வீட்டுவசதி திட்டத்திற்காக 2 ஆயிரத்து 696 கோடி ரூபாயும், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்திற்காக 2 ஆயிரத்து 301 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ஆயிரத்து 361 கோடி ரூபாயும், அம்மா தாய்சேய் நல ஊட்டச் சத்துப் பெட்டக திட்டத்திற்கு ஆயிரத்தோரு கோடி ரூபாயும், மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டத்திற்காக 758 கோடி ரூபாயும், திருமண உதவித்தொகை திட்டங்களுக்காக 724 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
Discussion about this post