சபரிமலை விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று காரசார வாதம் நடைபெற்றது. அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என கடந்த செப்டம்பர் 28ம் தேதி உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதற்கு ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள் மற்றும் பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர். 60க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் நாரிமன், கான்வில்கர், சந்திரச்சூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோரை உள்ளடக்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை மேற்கொண்டது.
சபரிமலையில் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் மத நம்பிக்கைகள் மீது நீதிமன்றம் தலையிடுவதில் தவறில்லை என்று கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதம் செய்தார். இந்நிலையில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
Discussion about this post