2020-ம் ஆண்டு நடைபெற உள்ள 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுக்கும் ஒரே ஆண்டில் உலக கோப்பை தொடர் நடைபெற இருப்பது, இதுவே முதல் முதல் முறை.
ஆண்களுக்கான பிரிவில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி தகுதி சுற்றுப் போட்டிகள் தொடங்க உள்ளது. அதனைதொடர்ந்து அக்டோபர் 24-ம் தேதி முதல் உலக கோப்பை போட்டிகள் ஆரம்பமாக உள்ளன. பி- பிரிவில் இந்திய அணியுடன் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான் அணிகளும், ஏ- பிரிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளது. இறுதி போட்டி நவம்பர் 15-ம் தேதி நடைபெற உள்ளது.
முன்னதாக நடைபெறும் தகுதி சுற்றுப் போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத வாய்ப்பு ஏற்படாமல் போய் விட்டதால், கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த இரு அணிகளும், அந்தந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளை தோற்கடித்தால் மட்டுமே அடுத்த சுற்றில் மோதிக்கொள்ளும்.
அதேபோல் பெண்களுக்கான உலக கோப்பை தொடர் பிப்ரவரி 21-ம் தேதி தொடங்குகிறது. ஏ- பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இலங்கை ஆகிய அணிகளும், பி- பிரிவில் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
Discussion about this post