நாட்டின் 70வது குடியரசு தின விழா டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற கோலாகல விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, மத்திய அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டானர். முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.
குடியரசு தின விழாவை ஒட்டி பாதுகாப்பு படைகளின் கண்கவர் அணிவகுப்பு நடைபெறுகிறது. மாநிலங்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகள், கலை நிகழ்ச்சிகள் விழாவில் இடம்பெற்றன.
தீவிரவாத அமைப்பில் இருந்து விலகி, இந்திய ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்த நசிர் அகமது வானிக்கு நாட்டின் மிக உயரிய விருதான அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது. அகமது வானியின் குடும்பத்தினரிடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதை வழங்கி கவுரவித்தார்.
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் 25 ஆயிரம் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அணிவகுப்பு நடக்கும் சாலைகள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் முழுவதும், கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
Discussion about this post