ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வந்தது. ஒருநாள் கிரிக்கெட் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா வீரர்கள் இந்திய பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக பீட்டர் ஹாண்ட்ஸ்கம்ப் 58 ரன்கள் எடுத்தார். 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புவனேஸ்வர்குமார், ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து, 231 ரன்கள் இலக்காக கொண்டு களம் இறங்கிய இந்திய அணி வீரர்கள் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆஸ்திரேலிய அணியும் துல்லியமாக பந்து வீசியதால் ஆட்டம் விறுவிறுப்பானது. இறுதியில் இந்திய அணி 49.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்திய அணியில் டோனி அதிகபட்சமாக 87 ரன்கள் எடுத்தார்.
Discussion about this post