கரூரில் 14 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாகி உள்ள பிரபல ஓட்டல் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த பொங்கலன்று நாமக்கல் மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, குட்கா ஏற்றி வந்த லாரியை பிடித்தனர். அப்போது அதன் ஓட்டுநர் அளித்த தகவல் பேரில், கரூர் உள்ள ஒரு குடோனுக்கு குட்கா எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, நாமக்கல் போலீசார் அளித்த தகவலின்போரில், கரூர் தான்தோன்றிமலை காவல் நிலையப் போலீசார் கரூர் ராயனூர் வெள்ளக் கவுண்டனூர் பகுதியில் உள்ள ஒரு குடோனை சோதனையிட்டனர். அங்கு 6 டன் அளவுக்கு மூட்டை, மூட்டையாக குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த குட்கா பொருள்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கரூரில் உள்ள பிரபல ஓட்டல் உரிமையாளாரான சுப்பிரமணி மற்றும் 3 பேர் வாடகைக்கு எடுத்து, பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தி வந்து குடோனில் வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. சுப்பிரமணிக்கு சொந்தமான மற்றொரு குடோனில் சோதனை நடத்தியதில், அங்கும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 8 டன் குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனர். இதேபோல, மற்றொரு இடத்திலிருந்து சுமார் சுமார் 360 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாகி உள்ள ஓட்டல் உரிமையாளர் சுப்பிரமணியனை தேடி வருகின்றனர்.
Discussion about this post