அலங்காநல்லூர்.. அமெரிக்க கண்டத்தில் இருப்பவருக்குக் கூட இந்த பெயர் தெரியும். அந்த அளவுக்கு ஜல்லிக்கட்டின் புகழை ஒட்டுமொத்த உலகுக்கு கொண்டு சென்ற ஊர் அலங்காநல்லூர்.
தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டுகள் நடைபெற்றாலும், அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டே உலகப் புகழ்பெற்றதாக உள்ளது. அலங்காநல்லூர் என்பது மதுரை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். 2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,331 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 6,286 பேர் ஆண்கள், 6,045 பேர் பெண்கள்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2000 ஆண்டுகளுக்கும் மேல் பாரம்பரியம் உடையதாகப் போற்றப்படுகிறது. கடந்த ஆண்டில் இங்கு நடந்த ஜல்லிக்கட்டை முதல்வர், துணை முதல்வர் தொடங்கிவைத்தனர். ஒரு முதல்வர் ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்தது அதுதான் முதல்முறை ஆகும்.
அலங்காநல்லூரில் கடந்த ஆண்டில் எட்டு சுற்றுகளாக நடந்து முடிந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 700 மாடுபிடி வீரர்களும், 520 காளைகளும் பங்கேற்றன. இதில் 8 காளைகளை பிடித்த அலங்காநல்லூரை சேர்ந்த அஜய் என்பவர் மாடுபிடி வீரர்களில் முதலிடத்தையும், ஆறு காளைகளை பிடித்த சரத், சங்கிலி முருகன் ஆகிய இருவரும் இரண்டாமிடத்தையும், வினோத் ராஜ் என்பவர் மூன்றாவது இடத்தையும் பெற்றதாகவும், மொத்தம் ஒன்பது காளைகள் சிறந்த காளைகளாக தேர்வு செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
Discussion about this post