சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட அலோக் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, சிபிஐ இயக்குநராக மீண்டும் பொறுப்பேற்ற அலோக் குமார் வர்மாவின் பதவி நேற்று அதிரடியாக பறிக்கப்பட்டது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து, தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படைத் துறையின் இயக்குநராக அலோக் வர்மா நியமிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய பணியாளர் அமைச்சக செயலாளருக்கு அலோக் வர்மா கடிதம் அனுப்பியுள்ளார். தன் மீது சுமத்தப்பட்டவை தவறான குற்றச்சாட்டுகள் என விளக்கம் அளித்துள்ளார். சிபிஐயின் தனித்துவத்திற்கு களங்கம் ஏற்படாத வகையில் நடந்து கொண்டதாகவும் சிபிஐ நடவடிக்கைகளில் யாருடைய தலையீடும் இருக்க கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post