சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் அலோக் வர்மா.
பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா குறித்து விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து சிபிஐ இயக்குனர் பொறுப்பில் இருந்து அலோக் வர்மாவை நீக்கலாம் என்று பிரதமர் மோடியும், நீதிபதி ஏ.கே.சிக்ரியும் வாக்களித்தனர். அவரை நீக்கக்கூடாது என்று கார்கே வாக்களித்தார். 2-க்கு ஒன்று என்ற கணக்கில் சிபிஐ இயக்குனர் பொறுப்பில் இருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டார். சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே வெடித்த அதிகார போட்டியை அடுத்த கடந்தாண்டு அக்டோபர் மாதம் இருவரையும் தற்காலிக விடுப்பில் அனுப்பியது மத்திய அரசு. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர் ராவ் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தை நாடினார். அலோக் வர்மாவுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த நடவடிக்கையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா பொறுப்பேற்றார். இந்நிலையில் இன்று மோடி தலைமையில் நடைபெற்ற தேர்வுக்குழு கூட்டத்தில் வர்மா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதனைதொடர்ந்து, அவர் தீயணைப்புத்துறை இயக்குனர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போன்று, சிபிஐ புதிய இயக்குனராக நாகேஸ்வர் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 31-ந் தேதியோடு அலோக் வர்மாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே அவர் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post