காஞ்சிபுரம் மாவட்டம், மானாமதி கிராமத்தை சேர்ந்த தம்பதி வெங்கடேசன், காளியம்மாள். இவர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பாசி மாலைகளை விற்று வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் தங்களிடம் இருந்த மாலைகளை விற்று விட்டு அணைக்கட்டு காவல்நிலையம் அருகே தங்கள் குழந்தை ஹரிணியுடன் படுத்து தூங்கினர். ஆனால் காலையில் கண்விழித்து பார்த்த போது தங்கள் குழந்தை ஹரினியை காணவில்லை. இதையடுத்து காவல்துறையிடம் புகார் அளித்த தம்பதி தங்கள் குழந்தை கிடைக்கும் வரை இங்கேயே இருக்கப் போவதாக அறிவித்து சரியான உணவு கூட இல்லாமல் தங்கள் குழந்தைக்காக காத்திருக்க தொடங்கினர்.
காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை சார்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஹரிணியைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. காவல்துறையினர் ஹரிணி புகைப்படத்தை நோட்டீசாக அச்சடித்து வினியோகம் செய்து தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.இதே நேரத்தில் குழந்தை ஹரிணியின் தாய் காளியம்மாள் 2 வது கர்ப்பமாக இருந்தார். தன் குழந்தை கிடைக்காத சோகத்தால் சரியாக உணவருந்தாமல், மருத்துவமனைக்கு செல்லாமல் கடும் காய்ச்சலால் பாதிக்கபட்ட அவருக்கு தீவிர சிகிச்சையும் வழங்கப்பட்டன. இந்நிலையில் குழந்தைகளுக்கான, பீஸ் ஆப் சைல்டு அமைப்பை நடத்தி வரும் லதா ரஜினிகாந்த், வெங்கடேசன், காளியம்மாள் தம்பதியை போனில் அழைத்து ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய அமைப்பு மூலமாக ஹரிணியை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தைரியமளித்தார். மேலும் மும்பையில் ஹரிணிபோல் இருக்கும் ஒரு குழந்தை குறித்தும் அதை மீட்க தன் அமைப்பு மூலம் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் காணாமல் போன சிறுமி ஹரிணி இன்று திருப்போருரில் மீட்கப்பட்டுள்ளார். சிறுமி கடத்தல் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.100 நாட்களுக்கு மேலாக தன்னுடைய குழந்தையை காணாமல் இருந்து, தன்னுடைய குழந்தை கிடைக்கும வரை தொலைந்த இடத்திலேயே இருந்து பாசப்போராட்டம் நடத்திய தம்பதியின் பாசம் காண்போரை நெகிழ வைத்தது. தாய் பாசத்தை மிஞ்சும் உறவு இந்த உலகத்தில் இல்லை என்று மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளது இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு.
Discussion about this post