எருமேலி வாவர் பள்ளிவாசலில் நுழைய முயன்ற தமிழக பெண்கள் 3 பேரை, கேரள போலீசார் கைது செய்தனர். அண்மையில் 2 பெண்கள், சபரிமலையில் தரிசனம் செய்ததால், எருமேலி பள்ளிவாசலுக்கு பெண்கள் வரக்கூடும் என்ற தகவல் பரவியது. இதனால், தமிழக – கேரள எல்லைகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் திருப்பூரை சேர்ந்த சுசீலாதேவி, ரேவதி மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த காந்திமதி ஆகிய 3 பெண்கள் உட்பட 6 பேர் காரில் கேரளா நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
பாலக்காடு கொழிஞ்ஞாம்பாறை அருகே சென்றுகொண்டிருந்த காரை தடுத்து நிறுத்தி கேரள போலீசார் விசாரணை செய்தனர். அப்போது, 3 பெண்களும் எருமேலி வாவர் பள்ளிவாசலுக்கு செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, 3 பெண்கள் உட்பட 6 பேரையும் கைது செய்த கேரள போலீசார், சிற்றூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாலக்காடு சிறப்பு சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட 6 பேர் மீது கலவரத்தைத் தூண்டும் நோக்கில் கேரளாவுக்குள் அனுமதியில்லாமல் நுழைந்தது, மத வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Discussion about this post