இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஃபாலோ ஆன் ஆன ஆஸ்திரேலியா 6 ரன்கள் எடுத்திருந்த போது மோசமான வானிலை காரணமாக 4-ம் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி, புஜாரா, மற்றும் ரிஷாப் பண்ட் ஆகியோரின் அபார சதத்தால் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்கஸ் ஹாரிஸ் 79 ரன்கள் எடுத்தார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 4-ம் நாள் ஆட்டம் இன்று தாமதமாக தொடங்கியது. இன்றும் இந்திய அணியின் பந்து வீச்சில் அனல் பறந்தது.
இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் தாக்குபிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், ஆஸ்திரேலியா அணி 300 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீல் யாதவ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜடேஜா, முகமது ஷமி இருவரும் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா 300 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பாலோ ஆன்-ஐ தவிர்க்க முடியாமல் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 ரன்கள் எடுத்த நிலையில், மோசமான வானிலை காரணமாக 4-ம் நாள் கைவிடப்பட்டது. நாளை கடைசி நாள் என்பதால், இந்த போட்டியில் வெற்றிப் பெற இந்திய அணி, ஆஸ்திரேலியாவின் 10 விக்கெட்டுகளை கைப்பற்றியே ஆக வேண்டும். ஆஸ்திரேலியா அணி நிலைத்து நின்று ஆடிவிட்டால், போட்டி சமனில் முடியும்.
ஏற்கனவே, இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று விளையாடி வருகிறது.
Discussion about this post