கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஆஸ்தான பயிற்சியாளர் ராமகாந்த் அச்ரேக்கர் (வயது 87) வயது மூப்பின் காரணமாக மும்பையில் காலமானார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சிறு வயது காலத்தில் இருந்தே ராமகாந்த் அச்ரேக்கர் பயிற்சி அளித்து வந்தார். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக சச்சின் விளங்கியதில் ராமகாந்த் அச்ரேக்கர் முக்கிய பங்கு உண்டு. அவ்வப்போது அவரிடம் சச்சின் ஆலோசனை பெற்று வந்தார்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் சச்சின் ராமகாந்த் அச்ரேக்கரை சந்தித்து ஆசி பெற்று வந்தார். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக ராமகாந்த் அச்ரேக்கர் மும்பையில் நேற்று காலமானார். சச்சின் தவிர வினோத் காம்பிளி, அஜீத் அகக்கர், பிரவீன் தம்பரே ஆகிய நிறைய கிரிக்கெட் வீரர்களுக்கு அவர் பயிற்சி அளித்துள்ளார்.
பயிற்சியில் சிறந்து விளங்கிய இவருக்கு 1990ஆம் ஆண்டு மத்திய அரசு சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருதும், 2010ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. குருவின் மறைவுக்கு சச்சின் டெண்டுல்கர் நேரில் அஞ்சலி செலுத்தியதோடு, ட்விட்டரில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
Discussion about this post