நெற்பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து காப்பது குறித்தும், இயற்கை வேளாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை காணலாம்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கீழ்பவானி வாய்கால் பாசன பகுதியில், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல்சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். குளிர்காலம் தொடங்கியுள்ளதால், நெற்பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து காப்பது குறித்து, விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். இதில், கடுக்காம்பாளையம், கோரக்காட்டுர், கொளத்துப்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வயல்வெளிகளில் பூச்சிகளை வலைகள் மூலம் சேகரிப்பது, நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகளை கண்டறிவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தீமை செய்யும் பூச்சிகள் அதிகமாக காணப்பட்டால் மட்டுமே, வேளாண் அதிகாரி அறிவுரைபடி, தேவையான மருந்துகளை வாங்கி தெளிக்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பூச்சி தாக்குதல்களை இயற்கையாகவே கண்டறிந்து, ரசாயன மருந்து தெளிக்கும் முறையை கைவிட்டு, பூச்சியை சமாளிக்கும் முறையை விவசாயிகள் புரிந்து கொண்டால், வருங்கால சந்ததியினருக்கு நஞ்சில்லா உணவை வழங்க முடியும் என்று வேளாண் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். வேளாண் அதிகாரிகளின் அறிவுரைப்படி, நஞ்சில்லா உணவுகளை சாகுபடி செய்வோம் என உறுதியளித்த விவசாயிகள், இதுபோன்ற பயிற்சி வகுப்புகளை தமிழகம் முழுவதும் நடத்த அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
Discussion about this post