திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடத்தி செல்லப்பட்ட ஒன்றரை வயது குழந்தையை மகாராஷ்டிரா மாநிலத்தில் போலீசார் பத்திரமாக மீட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த ஜீ ஜதேவ், தீபிகா தம்பதியினர் தங்களது ஒன்றரை வயது குழந்தை வீரேஷுடன் சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி கோயிலுக்கு வந்தனர். தங்கும் அறை கிடைக்காததால், கோயிலில் உள்ள திறந்தவெளி மண்டபத்தில் தூங்கியதாக தெரிகிறது. அதிகாலையில், தீபிகா விழித்துப் பார்த்த போது, குழந்தை வீரேஷை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, ஜதேவ் அளித்த புகாரின்பேரில் திருமலை போலீசார் தனிப்படை அமைத்து குழந்தை வீரேஷை தேடி வந்தனர். ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், குழந்தையை மர்ம நபர் ஒருவர் கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடத்தல்காரரின் புகைப்படங்களை போலீசார் மீடியாக்களுக்கு வெளியிட்டனர். இந்தநிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேடு அருகே மர்ம நபரை கைதுசெய்த போலீசார், குழந்தை விரேஷை பத்திரமாக மீட்டனர்.
Discussion about this post