கடந்த 2014 முதல் 2018 வரையில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக, 2 ஆயிரத்தி 21 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், பிரதமர் மோடி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து விவரங்களை அளித்துள்ளார்.
2014ம் ஆண்டு பதவியேற்றது முதல் இந்தாண்டு டிசம்பர் 3ம் தேதி வரையில் மொத்தமாக 48 வெளிநாட்டு பயணங்களை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளதாக விகே சிங் தெரிவித்துள்ளார். இந்த பயணங்களில் 55 வெளிநாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். சில நாடுகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை அவர் சென்றுள்ளார்.
இந்த காலகட்டத்தில் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக 2 ஆயிரத்து 21 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ள நிலையில், இதில் தனிநபர் விமானம், அதற்குரிய பராமரிப்பு செலவுகளுக்காக ஆயிரத்து 583 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் 2வது 5 ஆண்டு காலத்தில், 2009 முதல் 2014 வரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வெளிநாட்டு பயணங்களுக்காக ஆயிரத்து 346 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கடந்த 2014ல் 81 ஆயிரத்து 843 அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் 2014 முதல் 2018 ஜூன் வரையிலான காலகட்டத்தில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 77 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாகவும் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
மோடியின் வெளிநாட்டு பயணங்களின் மூலம் அமெரிக்கா, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து அதிக அளவில் வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Discussion about this post