முக்கிய திருத்தங்களுடன் மக்களவையில் மீண்டும் தாக்கலாகிறது திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா. உடனடி முத்தலாக் முறையை தண்டனைக்குரிய குற்றமாக்கும் மசோதா மற்றும் அதன் பின்னணி
உடனடி முத்தலாக் முறை சட்டவிரோதம் என கடந்த ஆண்டு அறிவித்தது உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு. இதனையடுத்து உடனடி முத்தலாக்கை பயன்படுத்தி விவாகரத்து செய்யும் ஆண்களை தண்டிக்கும் வகையில் சட்டம் இயற்ற முடிவு செய்தது மத்திய அரசு. பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மக்களவையில் மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசு, மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் உடனடி முத்தலாக் விவகாரத்தை கிடப்பில் போட்டது.
இந்த சூழலில் தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மூன்று திருத்தங்களுடன் கூடிய உடனடி முத்தலாக் சட்டத்தை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதலாவது திருத்தமாக உடனடி முத்தலாக்கில் சிக்கும் கணவன், இனி ஜாமீன் பெற முடியும்… அதேசமயம் கணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் பிரிவில் எந்த சமாதானமும் செய்யவில்லை… முத்தலாக்கினால் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ரத்த உறவுகள் மட்டுமே புகார் அளிக்கும் வகையில் இரண்டாவது திருத்தம் செய்யப்பட்டுள்ளது… மூன்றாவது திருத்தமாக கணவன், மனைவி இடையே சமரசம் செய்து வைக்க மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் வழங்குகிறது தற்போதைய மசோதா.
மக்களவையில் முஸ்லிம் பெண் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் திருமணச் சட்டத்தை தடங்கல் இன்றி நிறைவேற்ற ஏதுவாக அவை நடவடிக்கையில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என பா.ஜ.க எம்.பிக்களுக்கு கட்டளையிட்டு இருக்கிறது அக்கட்சியின் தலைமை.ஆனால் மாநிலங்களவையில் தடை கற்களை தகர்த்தெறியுமா என்பது எதிர்க்கட்சிகளின் கையில் தான் இருக்கிறது….
Discussion about this post