தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி, காங்கிரஸ் – பா.ஜ.க அல்லாத கட்சிகளை ஒருங்கிணைத்து, மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில், சந்திரசேகர ராவ் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோருடன் பேச்சு நடத்தினார். இதனைத் தொடர்ந்து, உத்திர பிரதேசத்தில் சமாஜ்வாதியின் அகிலேஷ், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி ஆகியோரையும் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேச சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே சந்திர சேகர ராவின் முயற்சிகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் மோடி- சந்திரசேகர ராவ் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post