மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்கள், நீதிமன்றத்தில் முறைப்படி வழக்கு தொடர்ந்தால், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என, மீனவர்கள் நல அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குடன், சென்னை மெரினா கடற்கரையில் மேற்கொள்ளப்படும் தூய்மை நடவடிக்கை மற்றும் கடைகளை அப்புறப்படுத்தவது தொடர்பான வழக்கும் இணைக்கப்பட்டது. இது குறித்து மாநகராட்சி ஆணையர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்கள், நீதிமன்றத்தில் முறைப்படி வழக்கு தொடர்ந்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
Discussion about this post