பொய் சொல்லலாமா ? வள்ளுவனும் கம்பனும் என்ன சொல்கிறார்கள்
இருள்-ஒளி , நன்மை-தீமை, சரி-தவறு மற்றும் பொய்-உண்மை என்கிற முரண்களின் புரிதல்களில் மனிதன் செய்யும் பெரும் தவறு இதில் நல்லதை மட்டும் வைத்துக்கொண்டு அல்லதைத் தவிர்க்கமுடியாது என்று புரிந்துகொள்ளாததுதான். தவிர்க்க முடியாது வேண்டுமானால் குறைக்க முடியும்.
நெருக்கமான மனிதர்கள் என்று பட்டியலிடக்கூட முடியாத மனிதவாழ்வில் யாரிடமும் பொய்சொல்லாமல் இருக்கமுடிவதில்லை. அரிச்சந்திரனுக்கும் சந்திரமதிக்கும் வேண்டுமானால் இது பொருந்தும்.
பொய் சொல்வதில் தவறில்லை. லேசாக சொல்லலாம் என்கிற சமாதானங்களும் நமக்கு நாமே சொல்லிக்கொண்டேதான் இருக்கிறோம். எனில் எதுதான் சரி. என்னதான் விடை?
எந்தஒரு சிக்கலுக்கும் தமிழ் சமூகம் விடைகாண வேண்டுமென்றால் திருக்குறளும், கம்பர் எழுதிய காப்பிய வடிவத் திருக்குறள் விரிவுரையான கம்பஇராமாயணமும் இல்லாமல் முடியாது.(தமிழுக்கு கதி (கம்பன் / திருவள்ளுவன்) இவர்கள்தான்).
முதலில் கம்பன் எதாவது விடை சொல்கிறானா பார்க்கலாம்.
அறத்தின் வடிவமாக வந்த நாயகன் ராமனுக்கும், தர்மத்தின் தனிமை தீர்க்கும் அனுமனுக்கும் முக்கியமான ஒருவர் கம்பராமாயணத்தில் சீதைதான். இந்த சீதையே ஒரு இடத்தில் பொய் சொன்னாள் என்கிறான் கம்பன்.
அசோகவனத்தில் அழுதபடி அமர்ந்திருக்கிற சீதையிடம் ஆசிபெற்றபிறகு விஸ்வருபமெடுத்து இலங்கையை அழித்துக்கொண்டிருக்கிறான் அனுமன். அசோகவனத்து அரக்கியர் சீதையிடம் இவன் யார் என்று தெரியுமா ? என்று கேட்டனர். இப்போது இவள் என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் சீதை இங்கேதான் பொய்சொல்கிறாள். என் ஸ்ரீஇராமர் தூதுவன் அனுமன் என்று சொல்லியிருக்க வேண்டுமே?. சொல்லவில்லை மாறாக
“கெட்டவர்கள் செய்வதெல்லாம் கெட்டவர்களுக்கே தெரியாவிட்டால் நல்லவர்களுக்கு எப்படித் தெரியும். அன்று,மாயமான் நிங்கள் அனுப்பியபோது அதை மாயமான் என்று இளையவன் சொன்னபோதும் அது கூடத் தெரியாமல் நிஜமென்று நம்பினேன். எனக்கெப்படித் தெரியும்” என்றாள்.
தீயவர் தீய செய்தல் தீயவர் தெரியின் அல்லால்,
தூயவர் துணிதல்உண்டே, நும்முடைச் சூழல்எல்லாம் ?
ஆயமான் எய்த,அம்மான், இளையவன், “அரக்கர்செய்த
மாயம்” என்று உரைக்கவேயும், மெய்என மையல்கொண்டேன்,’ (5476, கம்பராமாயணம்)
எங்கே வெறுமனே தெரியாது என்றால் நம்பமாட்டரோ என்றுதான் இப்படியொரு கதை வேறு சொல்கிறாள். அட என்ன இது? சீதை இப்படிப் பொய் சொல்லிவிட்டாளே என்றிருக்கிறதா?. சீதை மட்டுமல்ல தாரை,கைகேயி,அனுமன்,இலக்குவன் என கம்பகாப்பியத்தின் போக்கு சில பொய்களாலேயே சுவாரசியப்படுகிறது.
இந்திய சமூகத்தின் நீதிக்காப்பியங்களில் ஒன்றான ராமாயணம் இப்படி பொய் சொல்வதை நியாயப்படுத்துகிறது. ஆனால் இங்கே சூழல் கவனிக்க வேண்டியது. அனுமன் இக்கட்டில் இருக்கிறான். இப்போது ராமன் தன் இருப்பிடத்தை அறிந்துகொண்டான் என்பது தெரிந்தால் அரக்கர்கள் இன்னும் எச்சரிக்கையாகி விடுவார்கள் என்பதால் இப்படி பொய் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறாள். நன்மை ஒன்றை வேண்டி பொய் சொன்னதால் இந்த இடத்தில் இந்த பொய் உண்மையின் இடத்தைப் பெறுகிறது. இதையேதான் வள்ளுவனும் சொல்கிறான்
பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்த்த
நன்மை பயக்கு மெனின் .
பொய்கள் தரும் விளைவைப் பொறுத்து அவை உண்மையின் பட்டியலிலும் சேர்க்கப்படும்
Discussion about this post