2018ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!
இந்த 2018ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அவரது ‘சஞ்சாரம்’ எனும் நாவலுக்காக வழங்கப்பட உள்ளது. அது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமூக சூழலிலும், பொருளாதார நிலையிலும் மிகவும் பின் தங்கியிருக்கும் தவில் மற்றும் நாதஸ்வர இசைக்கலைஞர்களின் வாழ்வை அடிநாதமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்தான் சஞ்சாரம். இசை ஞானம் தனக்கு அவ்வளவாக இல்லை என்று சொல்லும் எஸ்.ரா இந்நாவலில் இசையின் நுணுக்கங்களை மிகத் துல்லியமாக விவரித்திருப்பார். இந்நாவலை எழுதுவதற்காக அவர் பல நாதஸ்வர இசைக்கலைஞர்களோடு உரையாடியிருக்கிறார். ஒவ்வொரு படைப்புக்கும் அதைப் படைத்தவன் அபரிமிதமான உழைப்பைக் கொடுக்க வேண்டியிருக்கும். அதுவே அப்படைப்புக்கு அவன் காட்டும் நேர்மையாக இருக்கும். அப்படியாக எஸ்.ரா தான் எடுத்துக் கொண்ட களத்தைப் பற்றி ஆராய்ந்து அதனை பதிவு செய்திருக்கிறார்.
தகுதியான மனிதருக்கு இவ்விருது வழங்கப்பட்டிருப்பதை இலக்கிய உலகமே கொண்டாடுகிறது. தமிழ் அறிவுச் சூழலில் எஸ்.ரா ஏற்படுத்திய தாக்கத்தையும், இலக்கியத்தில் அவரது செயல்பாட்டையும் யாராலும் எளிதில் மறுத்து விட முடியாது. யதார்த்தவாத கதைகளில் தனது எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர் மாய யதார்த்த வாத கதைகளையும் பெருமளவு எழுதியிருக்கிறார். நெடுங்குருதி, யாமம் ஆகிய இரண்டு நாவல்களை எஸ்.ராவின் முக்கியப் படைப்பாகக் கருத முடியும். மகாபாரதத்தை மீள் உருவாக்கம் செய்து அவர் எழுதிய உபபாண்டவம், அவரது பயணங்களை பற்றிய கட்டுரைத் தொகுப்பான தேசாந்திரி, உலகத் திரைப்படங்கள் மற்றும் திரைக் கலைஞர்கள் பற்றியான கட்டுரைத் தொகுப்புகள் என எஸ்.ரா பல்வேறு தளங்களில் எழுதக்கூடிய ஆளுமையாகத் திகழ்கிறார்.
தமிழ் வார இதழ் ஒன்றில் தமிழின் முன்னோடி எழுத்தாளர்களை அறிமுகம் செய்யும் ‘கதாவிலாசம்’ தொடரை அவர் எழுதினார். வெகுஜன வாசகர்களிடையே நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்யும்படியாக அத்தொடர் அமைந்தது. நவீன இலக்கியத்தைப் பரவலான மக்களிடம் எடுத்துச் சென்றதில் சுஜாதாவுக்கு அடுத்தபடியாக எஸ்.ரா- வுக்கு பெரும் பங்கு இருக்கிறது. எழுத்துகள் மட்டுமல்லாமல் தன் மேடைப் பேச்சுக்கும் பல ரசிகர்களைக் கொண்டிருப்பவர் எஸ்.ரா.
அவருக்கு வாழ்த்துகள்!
Discussion about this post