வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டிவிகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை மறுசீராய்வு அறிக்கை வெளியிடப்படும்.
ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் மற்றும் வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. அதன்படி ரெப்போ வட்டிவிகிதம் 6.50 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6.25 சதவீதமாகவும் உயர்ந்தது. அதன்பின்னர் அக்டோபர் மாதம் நடந்த கூட்டத்தில் வட்டிவிகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தலைமையில் இன்று நிதிக்கொள்கை கூட்டம் கூடியது. அப்போது, வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டிவிகிதத்தில் மாற்றம் இல்லை என்றும் ரெபோ வட்டிவிகிதம் 6.5 சதவீதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி அறிவிப்பால் வங்கிகள், வீட்டுக்கடன் உள்ளிட்ட பிற கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது.
Discussion about this post