அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கிய அலாஸ்கா மாநிலத்தில் அவசரநிலையை பிரகடனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள அன்கரேஜ் நகரின் அருகே ஏற்பட்ட 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை சில மணி நேரத்துக்கு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் அம்மாநிலத்தில் உள்ள பல சாலைகள், வீடுகள் மற்றும் அரசு கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அர்ஜென்டினா நாட்டுக்கு சென்றிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அலாஸ்கா மாநிலத்தில் அவசரநிலையை பிரகடனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
தேசிய பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெறவும் இதற்கான செலவினங்களை தங்குதடையின்றி ஒதுக்கீடு செய்யவும் இந்த உத்தரவு துணைபுரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post