உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு ஈழம் என்றதும் நினைவில் வருவது பிரபாகரன் எனும் சொல். ஈழத்தில் உள்ள வல்வெட்டித்துறையில் 1954-ம் ஆண்டு இதேநாளில் பிறந்த பிரபாகரனுக்கே தெரியாது தாம் ஒரு யுகப் போராளியாவோம் என்று. பிரபாகரனின் பிறந்தநாளில் அவர் குறித்த ஒரு மீள்பார்வை…
தாம் கைம்பெண்ணானதும், சிங்கள அரசின் அடக்குமுறை குறித்தும் விளக்கமாக பிரபாகரனின் தாயிடம் அவரது தோழி ஒருவர் கண்ணீர் மல்க விவரித்துள்ளார். தன் அன்னையின் அருகில் அமர்ந்து கேட்ட பதின் வயது பிரபாகரனின் நெஞ்சில் பதித்த பசுமரத்தாணி இது. இதைத் தொடர்ந்து ஒரு முடிவுக்கு வந்த பிரபாகரனின் செயல், அவரை தேடி காவலர்கள் வரும்வரை பெற்றோரே அறியாதது.
தமிழீழம் தொடர்பான அமைப்பைத் தொடங்கிய பிரபாகரனின் கரம், கொஞ்சம் கொஞ்சமாக ஓங்கியது. சக மக்களுக்காக நிலவியல் அமைப்பு மற்றும் அரசியல் ரீதியாக பிரபாகரன் நடத்திய உரிமை போராட்டத்தின் ஒருபகுதியாக தனியாக ஒரு அரசாங்கமே நடந்தேறியது. ஈழத் தமிழர் வங்கி, நாட்டுக்காக மலர், மரம், பறவை என்ற வரிசையில் வந்ததே புலியும். தாம் பேசுவதைவிட செயலே பேசவேண்டும் என்ற கொள்கைபிடிப்புடன் தமது குடும்பத்தையும் போரில் ஆட்படுத்திய பிரபாகரன், வான்படை வைத்திருந்த முதல் போராளி என்பது உலகம் வியந்த உண்மை.
பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கும், துரோகத்துக்கும் நடுவே தேடப்படும் பயங்கரவாதியாகவும், குழந்தைகளை பாதுகாக்கும் செஞ்சோலை இல்லத்தின் பிதாமகனாவும் அறியப்பட்ட பிரபாகரன் 2009-ம் ஆண்டு மே மாதம் நடந்த போரில் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக, வான்படை தளபதியான பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆண்டனி போர் முனையிலும், முகாமில் இருந்த இளைய மகன் பாலசந்திரன் ராணுவத்தின் துப்பாக்கி முனையிலும் கொல்லப்பட்டனர். மனைவி மதிவதனி, மகள் துவாரகா ஆகியோர் நிலை அறியக்கிடைக்கவில்லை. லட்சக்கணக்கான மாவீரர்களுடன் மறைந்திட்ட போராளி பிரபாகரன், செங்காந்தள் மலராய் சுடர்விடும் ஈழத்து இளையவர்களின் தம்பி.
Discussion about this post