இந்தியாவுக்கு எதிரான மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
6-வது மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. ஆண்டிகுவாவில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதின. டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய தான்யா 11 ரன்களிலும், மந்தனா 34 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, 19 புள்ளி 3 ஓவர்களில் 112 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தது. தொடக்க வீராங்கனைகள் டேனியல் வயட், டாமி பீமவுண்ட் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். அடுத்து களமிறங்கிய எமி ஜான்ஸ் 53 ரன்களும், நடாலியா சிவெர் 52 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் இங்கிலாந்து அணி 17 புள்ளி 1 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Discussion about this post