கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில், தங்களது மேற்படிப்பிற்காக சேமித்து வைத்திருந்த ஏழாயிரத்து 200 ரூபாய் பணத்தை, மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய அரியலூரை சேர்ந்த அண்ணன், தங்கையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கிய கஜா புயலில் சிக்கி தஞ்சை, நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் பெரிதும் பாதிப்படைந்தன. புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரியலூரை சேர்ந்த 9ம் வகுப்பு பயிலும் நிறை நெஞ்சன் என்ற மாணவர், 4ம் வகுப்பு பயிலும் தனது சகோதரி சாதனாவுடன் சேர்ந்து, அவர்களின் மேற்படிப்பிற்காக, பெற்றோர்கள் அவ்வப்போது வழங்கும் சிறுசிறு தொகையை சேர்த்து வைத்துள்ளனர்.
கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில், தாங்கள் சேர்த்து வைத்திருந்த 7 ஆயிரத்து 200 ரூபாய் உண்டியல் சேமிப்பினை, மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமியிடம் நேரில் வழங்கினர். அவர்களின் இந்த செயல் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிவாரணம் அளித்ததில் மனம் திருப்தியடைந்ததாக இருவரும் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post