இந்திய சுதந்திரத்திற்காக கடைசி வரை போராடிய தமிழன் இவ்வுலகை விட்டு பிரிந்த தினம் இன்று… அவர் குறித்து விளக்குகிறது இந்த சிறப்பு தொகுப்பு…
கப்பலோட்டிய தமிழன் என்ற பெருமைக்குரியவர்… வழக்கறிஞர்கள் என்றாலே நிமிடத்திற்கு விலை பேசுவார்கள் என்ற எண்ணம் நம் மனதில் ஆழமாய் பதிந்திருக்கிறது… ஆதலால் தான் ஏழை எளியோருக்காக இலவசமாக வாதிடும் வழக்கறிஞர்களை ஆச்சரியமாக பார்க்கின்றோம்… இவர்களுக்கு எல்லாம் வழிக்காட்டிய முன்னோடி தமிழன் அவர்…. ஆம் அவர் தான் வ.உ.சி என உரிமையுடன் அழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை…
இந்தியாவின் கரங்களில் அடிமை சங்கிலி கட்டப்பட்டிருந்த சூழலில் கப்பல் போக்குவரத்தை தம்வசம் வைத்திருந்தனர் ஆங்கிலேயர்கள்… அதன் மூலம் இந்தியர்களின் வணிகம் கடல் கடந்துவிடாமல் பார்த்துக்கொண்டனர். இதனை உணர்ந்த வழக்கறிஞரான வ.உ.சி 1906-ம் ஆண்டு இந்தியர்களின் ஒத்துழைப்புடன் சுதேசி நாவாய் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தை துவங்கினார்… ஷாலேன் ஸ்டீமர்ஸ் நிறுவனத்திடம் இருந்து கப்பல்களை வாடகைக்கு எடுத்து இயங்கியது சுதேசி… இதனால் பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது… கொள்ளைப்புற தந்திரத்தில் கைதேர்ந்தவர்கள் மிரட்டல் அவதாரம் எடுத்தனர்… ஷாலேன் ஸ்டீமர்ஸ் நிறுவனத்தை மிரட்டி சுதேசி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வைத்தது ஆங்கிலேய அரசு… இருப்பினும் இந்தியர்களின் உதவியுடன் எஸ்.எஸ்.காலியோ, எஸ்.எஸ்.லாவோ ஆகிய கப்பல்களை வாங்கினர் சுதேசி நிறுவனத்தினர்…
ஆனால் ஆங்கிலேயர்களின் தொடர் சதிகளால் சுதேசி நாவாய் சங்கம் மூடப்பட்டது… ஆங்கிலேய அரசுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக 1908-ம் ஆண்டு சிறைக்கு சென்ற வ.உ.சி, விடுதலையான பின்னரும் கடைசி உயிர்மூச்சு வரை தேச விடுதலைக்காக போராடினார்… ஆம், 1936-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி அந்த மாமனிதரின் உயிர் இவ்வுலகைவிட்டு பிரிந்தது.
Discussion about this post