மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
மகளிர் டி20 உலக கோப்பை போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லீக் சுற்றில் பி பிரிவில் உள்ள இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தானா 87 ரன்களும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 43 ரன்களும் குவித்தனர்.
இதனையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அடுத்தடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி, 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்திய அணியின் சார்பில், அனுஜா பாட்டில் 3 விக்கெட்டுகளையும் தீப்தி சர்மா, ராதா யாதவ், பூனம் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் குரூப் பி பிரிவில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது.
Discussion about this post