திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் இன்று தொடங்கியது.
முருகன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் சிறப்பு வாய்ந்தது கந்தசஷ்டி திருவிழா. இந்நிலையில், திருச்செந்தூரில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இதனையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளினார்.இதைத்தொடர்ந்து கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து விரதமிருந்து முருகனை வழிபடுவார்கள்.
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகின்ற 13-ம் தேதி மாலை கோவிலையொட்டி கடற்கரையில் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
Discussion about this post