திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியை அடுத்த சொட்டகவுண்டம்பாளையம் பகுதியில் தங்கராஜ் – சுமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். பனியன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இவர்களுக்கு, 9 வயதில் விக்னேஷ் என்ற மகனும், 8 வயதில் பவனேஷ் என்ற மகனும் உள்ளனர். காலையில் வேலைக்குச் செல்லும் தங்கராஜ் – சுமதி தம்பதியினர், மாலையில் வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று அவர்கள் வழக்கம்போல், வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், அவர்களது இளைய மகன் பவனேஷ், மதியத்திற்குப் பிறகு காணாமல் போய் உள்ளான். இதையடுத்து, வேலையை முடித்துவந்த தங்கராஜ், அவரது மகன் காணாமல் போனது குறித்து, ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிறுவனைக் காவல்துறையினர் தேடிக்கொண்டிருந்த நிலையில், பல்லகவுண்டன் பாளையத்தில் உள்ள குளத்தின் அருகில், ஒரு சிறுவனின் உடல் சடலமாக கிடக்கும் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், சடலமாகக் கிடந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அதையடுத்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், முதல்நாள் காணாமல் போன பவனேஷ் என்ற சிறுவன் தான் குளக்கரையில் பிணமாகக் கிடந்தவன் என்பது தெரியவந்தது. வயிறு மற்றும் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு பவனேஷ் கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
இதையடுத்து, ஊத்துக்குளி காவல் ஆய்வாளர் தவமணி தலைமையில் ஏழு தனிப்படைகள் அமைத்துக் கொலையாளிகள் யார் என்பதையும்? கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், ஊத்துக்குளிப் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர்தான், பவனேஷை கடைசியாக அழைத்து சென்றது என்பதைக் கண்டறிந்த காவல்துறையினர், உடனடியாக அந்த சிறுமியை கண்டுபிடித்துத் தீவிர விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் பல உண்மைகள் வெளிவந்தன.
பவனேஷை அழைத்துச் சென்ற சிறுமி, 21 வயதான அஜித் என்ற இளைஞருடன் குளக்கரை பகுதியில் தனிமையில் உல்லாசமாக இருந்ததாகவும், அதை அந்த வழியாக வந்த பவனேஷ் பார்த்துவிட்டதாகவும், அதை பவனேஷ் வெளியில் சொல்லிவிடுவானோ என்ற அச்சத்தில், சிறுமியும், அவருடன் உல்லாசமாக இருந்த அஜித்தும்,சிறுவன் பவனேஷைக் கொலை செய்ததாகவும் தெரிவித்தார். மேலும், குளக்கரையில் கிடந்த உடைந்த பாட்டிலின் கண்ணாடிப் பீங்கான்களைக் கொண்டு சிறுவன் பவனேஷைக் கழுத்திலும் வயிற்றிலும் குத்தி இருவரும் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அஜித் என்ற இளைஞரை வளைத்துப் பிடித்த காவல்துறையினர் அவரிடமும் இதுபற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் மற்றொரு பெண்ணையும் காதலித்து வந்ததும், சிறுமியுடன் உல்லாசமாக இருந்த விஷயம் வெளியில் தெரிந்தால், மற்றொரு பெண்ணுடனான காதலில் சிக்கல் வரும் என்ற அச்சத்தில் சிறுவனைக் கொலை செய்ததாகவும் அஜித் தெரிவித்தான். ஊத்துக்குளி காவல்துறையினர், இந்தச் சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு தவறை மறைக்க… கொலை எனும் மிகப்பெரிய குற்றத்தைச் செய்து, சிக்கிக்கொண்ட இளைஞரும், சிறுமியும் தங்கள் வாழ்வை மொத்தமாகத் தொலைத்துள்ளனர் என்பதே உண்மை.
Discussion about this post