மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா உள்பட மூன்று மசோதாக்கள் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையின் போது, 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 10% உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு பரித்துரைத்தது. 7.5% உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அமைச்சரவை கடந்த ஜூன் 14ஆம் தேதி ஒப்புதல் அளித்த நிலையில், இதற்கான மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையே சமத்துவத்தை வழிவகை செய்யும் உள் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் மசோதா ஒருமனதாக நிறைவேறியது.
உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் தலையிட முடியாது என்றும் சட்டத்துறை அமைச்சர் சிவி. சண்முகம் விளக்கமளித்துள்ளார். இதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, சமூக நீதி வழங்குவதற்கு 7.5 % உள் இடஒதுக்கீடு வழிவகை செய்யும் என்றும் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாயும், பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு 500 ரூபாயும், நெறிமுறைகளை பின்பற்றாத சிகை அலங்கார, உடற்பயிற்சி கூடங்களுக்கு 5,000 ரூபாயும் அபராதம் விதிக்க சட்டம் வழிவகை செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய விடாமல் தடுப்பது தண்டனைக்குரிய குற்றமாக பதிவு செய்யும் மசோதாவும் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. இதன் மூலம் ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க இந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்துள்ளது.
Discussion about this post