சந்திரயான் 2 -முன்னுள்ள 7 சவால்கள் என்னென்ன?

நிலவை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலம் கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நிலவின் மேற்பரப்பை களஆய்வு செய்வதற்காக ரூ.800 கோடி மதிப்பில் சந்திரயான்-2 விண்கலத்தை ஏவும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ செயல்படுத்த திட்டம் தீட்டியது.

இதுவரை வேறெந்த நாடும் ஆய்வு செய்யாத, நிலவின் தென்துருவமுனைப் பகுதியில் தரையிறங்கி ஆய்வு செய்யும் வகையில் முதல் முறையாக ‘ரோவர்’ வாகனம் ஒன்றும் சந்திரயான் 2 விண்கலத்தில் இணைக்கப்பட்டுள்ளது..

சந்திரயான்-2 விண்கலத்தை  கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் 2018 மார்ச் மாதத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட்-6 ஏ செயற்கைகோள் தனது தொடர்பை இழந்ததால், சந்திரயான்-2 திட்டம் அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நவம்பர் மாதத்துக்கும் அதன் பின்னர் 2019 ஜனவரிக்கும் இத்திட்டம் தள்ளிப்போனது.

இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் சந்திரயானை ஏவப் பலமுறைகள் திட்டங்கள் வகுக்கப்பட்டும் அவற்றை செயல்படுத்த முடியவில்லை. 2019 மே மாதத்தில் சந்திரயானை விண்ணில் ஏவ இஸ்ரோ இறுதியாகத் திட்டமிட்டது. ஆனால் அதே மே மாதத்தின் தொடக்கத்தில் இஸ்ரேல் ஏவிய ‘பெர்சேஷெட்’ விண்கலம் நிலவின் தரைப்பகுதியில் விபத்துக்குள்ளானதால் சந்திரயான் 2 விண்கலம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்நிலையில் வரும் ஜூலை மாதத்தில் சந்திரயான் 2 கட்டாயம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்து உள்ளது.

சந்திரயான் 2 விண்கலத்தை விண்ணில் ஏவும் திட்டத்தில் இஸ்ரோ சந்திக்கும் 7 மிகப் பெரிய சவால்கள் என்னென்ன? – இந்தத் தொகுப்பில் பார்ப்போம்…

1. தரையிறங்குதல்:

நிலவின் மேற்பரப்பில் தரையிறங்குதல் என்பதுதான் இந்தத் திட்டத்தின் மிகக் கடினமான பகுதி. இதில் ரஃப் பிரேக்கிங், ஃபைன் பிரேக்கிங் – என்று இருவித அமைப்புகள் பயன்படுத்தப்பட உள்ளன. நிலவின் தரையில் ஈர்ப்புவிசை இடத்திற்கு இடம் மாறுபடும். இந்த மாறுபாடு விபத்துகளை தோற்றுவிக்கக் கூடியது என்பதால், தரையிறக்கத்தின் போது விண்கலத்தின் கட்டுப்பாடு, விசை ஆகிய இரண்டும்  தற்சார்புடன் தன்னிச்சையாக இயங்க வேண்டிய அவசியம் உள்ளது. இது மிகப் பெரிய சவால்.

2. பயணப்பாதையின் துல்லியம்:

பூமியில் இருந்து நிலவின் தூரம் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோமீட்டர்கள். இவ்வளவு நீண்ட தொலைவைக் கடக்கும் போது அந்தப் பயணத்தின் பாதை துல்லியத்தன்மையோடு இருக்க வேண்டியது அடுத்த பெரிய ச‌வால். இந்தப் பாதையில் பல சிக்கல்கள் உண்டு, குறிப்பாக பூமி மற்றும் நிலவு ஆகியவற்றின் ஈர்ப்புவிசைகளில் ஏற்படும் மாற்றம் பயணத்தின் பாதையை பாதித்தால், விண்கலத்தால் திட்டமிட்ட இடத்தில் தரையிறங்க முடியாமல் போய்விடும்.

3. விண்வெளி தொலைதொடர்பு:

விண்வெளியில் தொலைவு அதிகரிக்கும் போது, தகவல் தொடர்பு கடினமாகின்றது. பூமியில் இருந்து அதிக தொலைவுக்கு ஒரு விண்கலம் செல்லும் போது தொலைதொடர்பு சிக்னல்கள் பலவீனமாகின்றன. அப்போது பெரிய ஆண்டெனாக்களை வைத்து சிக்னல்களை பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மேலும் பயணத்தின் போது ஏற்படும் அதிக சத்தமும் தொலைதொடர்பை சிக்கலாக்கக் கூடும்.

4. சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழைதல்:

சந்திரயான் 2 விண்கலம் புவியில் சுற்றுப் பாதையில் இருந்து விலகி சந்திரனின் சுற்றுப்பாதையில்  நுழைய டி.எல்.ஐ. அதாவது டினான்ஸ் லூனார் இன்ஜெக்ஷன் (Trans Lunar Injection) என்ற முறை பயன்படுத்தப்பட உள்ளது. இம்முறையில் விண்கலனின் உள்ள ரசாயன எஞ்சின்களை இயங்கி, இன்னும் அதிக விசையைக் கொடுத்து விண்கலனின் பாதை மாற்றப்படும். இந்த முறையைப் பயன்படுத்த வேண்டும் என்றால் நிலவின் சுற்றுப்பாதையை மிகவும் துல்லியமாகக் கணிக்க வேண்டியது அவசியம். நிலவின் சுற்றுப்பாதை அடிக்கடி மாறுபடக் கூடியது என்பதால் இதுவும் இன்னொரு பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது.

5. சந்திரனைச் சுற்றுதல்:

சந்திரனின் மேற்பரப்பில் ஈர்ப்பு விசையானது மெலிதானதாக, சமச்சீர் தன்மை இல்லாததாக உள்ளது.  இந்த ஈர்ப்புவிசை மாறுபாட்டினால் சந்திரனின் மேல் சுற்றிவரும் விண்கலன்களும் பாதிப்படையக் கூடும். மேலும் சந்திரனின் மேற்புற வெப்பநிலையும் கூட விண்கலத்தை பாதிக்கக் கூடியது என்பதால் அதனையும் துல்லியமாகக் கணிக்க வேண்டிய தேவை உள்ளது.

6. சந்திரனின் மாசுகள்:

சந்திரனின் மேற்பரப்பானது எரிமலைத் துகள்கள், பாறைகள் மற்றும் தூசுகளால் ஆனது. அந்த மேற்பரப்பில் ஒரு விண்கலம் தரையிறங்கும் போது வெப்பக் காற்றால் மாசுகள் அனைத்தும் காற்றில் மேலே எழும்பும். இந்த மாசுகளால் விண்கலத்தில் உள்ள சோலார் பலகைகள் முதல் சென்சார் எந்திரங்கள் வரை அனைத்தும் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. இந்த பாதிப்புகள் முடிந்த அளவுக்குக் குறைக்கப்பட வேண்டும்.

7.அதீத வெப்பமும் அழுத்தமும்:

சந்திரனின் ஒரு நாள் என்பது புவியின் 28 நாட்களுக்கு சமம். அங்கு ஒரு பகல் முடிவுக்கு வர புவியின் கணக்கில் 14 நாட்கள் ஆகும். 14 நாட்கள் தொடரும் பகலின் வெப்பமும், அதனால் ஏற்படும் வெற்றிட அழுத்தமும் நமது அய்வுக் கருவிகளை பாதிக்கக் கூடியவை. இந்த சூழல் நிலவின் மேற்பரப்பு ஆய்வை இன்னும் கடினமாக்குகின்ற‌து.

இந்த 7 சவால்களையும் சந்திக்கும் வகையிலேயே சந்திரயான் வடிவமைக்கப்பட்டு உள்ளது என்றாலும், சந்திரயான் 2வின் விண்வெளிப் பயணம் மிகக் கடினமான ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. அதனால்தான் சந்திரயான் 2 விண்கலனை ஏவுவதில் இஸ்ரோ இவ்வளவு முன்னெச்சரிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
Exit mobile version