ஒரே ஓவரில் 6 சிக்ஸ்: நியூசிலாந்தின் "யுவராஜ் சிங்" சாதனை

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து கேண்டர்புரி அணி வீரர் சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சின் ஒரு ஓவர் முழுவதையும் சிக்சருக்கு பறக்க விட்ட இந்திய அணி வீரர் யுவராஜ் சிங்கின் சாதனையை அவ்வளவு எளிதில் நம்மால் மறக்க முடியாது. அதேபோல் மற்றுமொரு சாதனை நியூசிலாந்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

நியூஸிலாந்தில் தற்போது சூப்பர் ஸ்மாஷ் என்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் கேண்டர்புரி , நார்த்தென் நைட்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த நார்த்தென் நைட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 219 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேண்டர்புரி அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி வந்தனர். இருந்தாலும் கடினமான இலக்கு என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில் ஆட்டத்தின் 16வது ஓவரை வீசுவதற்கு நார்த்தென் நைட்ஸ் அணி வீரர் ஆண்டன் டேவிசிக் தயாரானார். எதிர்முனையில் கேண்டர்புரி அணி வீரர் லியோ கார்டர் பேட்டிங் செய்தார். அந்த ஓவரின் 6 பந்துகளையும் சிக்சருக்கு விரட்டினார் லியோ கார்டர். அவரது அதிரடியை பார்த்து எதிரணி வீரர்கள் மட்டுமல்ல பார்வையாளர்களும் வியந்தனர். அந்த ஒரு ஓவர்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

கேண்டர்புரி அணி பதினெட்டாவது ஓவரிலேயே 220 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. லியோ கார்டர் 29 பந்துகளில் 70 ரன்களை குவித்தார்.மேலும் இது தொடர்பான வீடியோ டுவிட்டரில் வெளியான உடன் ரசிகர்கள் இந்திய வீரர் யுவராஜ் சிங்குடன் அவரை ஒப்பிட்டு புகழ்ந்து தள்ளினர்.

Exit mobile version