6 வயது சிறுவன் சர்வேஷ் 3 உலக சாதனைகள் படைத்து பெற்றோருக்கும், பிறந்த நாட்டிற்கும் பெருமை தேடி தந்துள்ளது அனைவரையும் நெகிழவைத்துள்ளது.
சென்னை அடுத்த தாம்பரத்தில் வசித்து வருபவர் விசு மற்றும் விஜயலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு சர்வேஷ் என்ற இரண்டாவது படிக்கும் ஆறு வயது மகன் உள்ளார்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றிற்காக கடலூர் சென்றிருந்த போது அங்கு நடைபெற்ற கிட்டத்தான்போட்டியில் விளையாட்டாய் ஓட செய்தனர் சர்வேஷின் பெற்றோர். ஆனால் அன்று ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட சர்வேஷ் மூன்றாவது பரிசை வென்றார்.
பெற்றோர்கள் இவரது ஓட்டத்தையும், திறமையை கண்டு வியந்தனர். பயிற்சி இல்லாமலேயே வெற்றி பெற்ற மகனுக்கு பயிற்சி கொடுத்தால் சாதனை படைப்பார் என்ற எண்ணத்தோடு வீட்டிலேயே பயிற்சி கொடுக்க ஆரம்பித்தனர். நான்கு வயதில் தொடங்கிய சிறுவன் சர்வேஷின் முயற்சி ஆறு வயதில் மூன்று உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டது..
தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் சர்வேஷ், வீட்டில் தொலைக்காட்சியை பார்த்து கொண்ருக்கும் போது ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் ஓடுவதை பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டார். மேலும், உசேன்போல்ட் குறித்து தந்தையிடம் கேட்டறிந்து 4 வயது முதலே மனதிற்குள் உசேன்போல்ட் போல் வர வேண்டும் என எண்ணி, அன்று முதல் கலந்து கொண்ட அனைத்து போட்டிகளிலும் பதக்கம், பரிசு பாராட்டுக்களை பெற்றார். 60 க்கும் மேற்பட்ட பதக்கங்கள்,சான்றிதழ்கள் என பெற்று வந்த சர்வேஷ் இன்று மூன்று உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
முதல் முறையாக 13 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ச்சியாக 30 நிமிடம் டிரட்மில்லில் ஓடி ஒரு உலக சாதனை படைத்தார். 57 மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்ட முதல் 6 வயது சிறுவன் என்ற மற்றொரு உலக சாதனையை படைத்தார். இது வரை 486 கிலோ மீட்டர் தூரம் ஓடி 3 சாதனைகளை படைத்தார் சர்வேஷ். இந்த சாதனைகளை கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் ஆய்வு செய்து அங்கீகரித்து உலக சாதனையை வழங்கியது. பதக்கமும் பரிசும் பெற்ற சர்வேஷ் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்று இந்தியாவிற்காக பெருமை சேர்ப்பேன் என மழலை மொழியில் கூறினார்.
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் என கேட்டதாய் என்ற திருவள்ளுவரின் குறளுக்கு பெருமை தேடி தந்த சர்வேஷை நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் சார்பில் பெருமையுடன் பாராட்டுகிறோம்
Discussion about this post