சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5ம் கட்டமாக அகழ்வாய்வு பணி அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. இதனை அமைச்சர் பாண்டியராஜன் துவக்கி வைத்தார். உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ள கீழடியில், முதல் 3 கட்டங்களாக, மத்திய அரசு சார்பில் அகழ்வாய்வு பணிகள் நடைபெற்றன. 4வது கட்டமாக, கடந்த ஆண்டில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டன. இந்தப் பகுதியில் இருந்து இதுவரை, 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான, 13 ஆயிரத்து 638 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 5வது கட்டமாக அகழ்வாய்வு பணிகள் துவங்கியுள்ளன.
இதை துவக்கி வைத்து பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன், 4ம் கட்ட அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு, அகழ் வைப்பகம் அமைக்கப்படும் எனவும், கூடிய விரைவில் இதற்கான அடிக்கல் நாட்டப்படும் எனவும் தெரிவித்தார். அகழ் வைப்பகத்திற்காக, தமிழக அரசு இரண்டு ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், அகழ் வைப்பகம் அமைக்க தமிழக அரசின் பாடநூல் நிறுவனம் ஒரு கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post