5-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது

மக்களவை தேர்தலின் 5 ஆம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.

7 கட்டங்களாக நடைபெறும் 17-வது மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நிறைவடைந்திருக்கும் 4 கட்ட தேர்தலில் நாடு முழுவதும் 68.2% வாக்குகள் பதிவாகியுள்ளன. 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் இருக்கும் 51 மக்களவை தொகுதிகளுக்கு, 5 ஆம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதனையடுத்து இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர். திங்கள்கிழமை அன்று நடைபெற இருக்கும் தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்டியிடும் லக்னோ, ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி, சோனியாகந்தி போட்டியிடும் ரேபரேலியிலும் வாக்குப்பதிவு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version