சமூக வலைத்தளங்களில், 55 லட்சம் ரசிகர்களைக் கொண்ட ஒரு பூனை, சமீபத்தில் மரணமடைந்தது. மக்களுக்கு தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்த அந்தப் பூனையின் கதையைத்தான் தற்போது பார்க்கப் போகிறோம்.
இணையதளவாசிகள் மத்தியில், லில் பாப் – என்ற பூனை மிகவும் பிரபலம். இந்தப் பூனை, விளம்பரங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளது. இதனைப் பற்றி ஆவணப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு பிரபல இதழ்களில், லில் பாப் பற்றிய கட்டுரைகள் வெளியாகி உள்ளன. இன்ஸ்டாகிராமில் 25 லட்சம் பேர், முகநூலில் 30 லட்சம் பேர் என, உலகெங்கும் 55 லட்சம் பேர் இந்தப் பூனையைப் பின்தொடர்ந்து வந்தனர். கடந்த 1ஆம் தேதியோடு தனது ரசிகர்களிடம் இருந்து நிரந்தரமாக விடைபெற்றது லில் பாப்.
சமூக வலைத்தளங்களில் அழகான விலங்குகளுக்கு ரசிகர்கள் இருப்பது வழக்கம்தான். ஆனால் மற்ற விலங்குகளில் இருந்து லில் பாப் மிகவும் வேறுபட்டது. ஏனெனில், பிறக்கும் போதே வளர்ச்சிக் குறைபாட்டோடு பிறந்து, வாழ்நாளில் பல பெரிய நோய்களை எதிர்கொண்ட தன்னம்பிக்கை நிறைந்த பூனைதான் இந்த லில் பாப்.
மற்ற பூனைகளைப் போல இதற்குப் பற்கள் இல்லை, தாடை சரியாக வளராததால் எப்போதும் இதன் நாக்கு வெளியில் நீட்டிக் கொண்டே இருக்கும். பிதுங்கிய கண்கள், நீட்டிய நாக்கு – என பிற பூனைகளில் இருந்து லில் பாப் வேறுபட்டு இருந்ததால், முதலில் இதனை
பெரிதாக கவனிக்காத மக்கள், இதன் கதையைக் கேட்ட பின்னர், லில் பாப்பின் பெரிய ரசிகர்களாகினர். லில் பாப்பின் பெயரால், விலங்குகள் நலத்திற்காக 7 லட்சம் டாலர்கள் நிதி திரட்டப்பட்டது என்பது, ரசிகர்கள் லில் பாப்பின் மீது கொண்ட அன்புக்கு ஒரு உதாரணம். ’உலக நாடுகளிலுள்ள லட்சக் கணக்கான மக்களின் எண்ணங்களில் பெரிய மாறுதல்களைக் கொண்டு வந்த பூனை’ – என்று பிரபல சமூக வலைத்தளமான இண்டாகிராம், லில் பாப்பிற்கு புகழாரம் சூட்டி உள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு, குறைபாடுகளோடு பிறந்த லில் பாப் பூனைக் குட்டியை, அமெரிக்காவைச் சேர்ந்த அதன் உரிமையாளர், விலைபோகாத சரக்கு என ஒதுக்கி வைத்திருந்தார். அங்கு எதேச்சையாகச் சென்ற பிரிடாஸ்கி என்ற விலங்குகள் ஆர்வலர், லில் பாப்பை எடுத்து வளர்க்க ஆரம்பித்தார். 2011ஆம் ஆண்டில் லில் பாப் குறித்த தகவல்களோடு, அவர் ‘லம்ளர்’ என்ற Blog-ஐ உருவாக்கினார். அதன் பின்னர் நடந்தது வரலாறு.
மக்களின் மனங்களில் மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையையும் விதைத்த லில் பாப் பூனை, சில காலமாக எலும்புருக்கி நோயின் தீவிர பாதிப்பைச் சந்தித்து வந்தது. சவால்கள் நிறைந்த தனது வாழ்க்கையின் மூலம், தன்னம்பிக்கையின் சின்னங்களில் ஒன்றாக தனது பெயரை அது விட்டுச் சென்றுள்ளது. லில் பாப்பின் மறைவினால், அதன் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர். இவ்வாறாக, பிறந்த போது தனது உரிமையாளரால் ஒதுக்கப்பட்ட ஒரு பூனைக் குட்டி, இறக்கும் போது, உலகெங்கும் உள்ள மக்களை கண்கலங்க வைத்துள்ளது.
Discussion about this post