திராவிட இயக்கத்தின் போர்வாளாக களம் கண்டு, எதிர்த்த களைகளையெல்லாம் எரித்த கொள்கைச் சூரியன் பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவுநாள் இன்று… அண்ணாவின் அடியொற்றி நடந்துவரும் வேளையில், அவரது வாழ்க்கைப் படிகளை வருடிப் பார்க்கிறது இந்தச் செய்திக் குறிப்பு.
தமிழ்த்தாய் பெற்ற லட்சக்கணக்கான தமிழ் மக்களை பல மாயைகள் சூழ்ந்திருந்த காலத்தில், அனைத்தையும் கிழித்தெறிய காஞ்சிபுரத்தில் நெசவாளர் குடும்பத்தில் செப்டம்பர் 15-ம் நாள் பிறந்தவர் அண்ணா.
சி.என்.அண்ணாதுரை என்ற அவரது பெயர் எந்த அளவிற்கு பொருத்தம் என்றால், தமது வாழ்நாள் முழுவதும் அவர் தமிழ் மக்களை தம் உடன்பிறப்புக்களாகவே கருதி, மூத்த அண்ணனாகவே செயல்பட்டார்.
பச்சையப்பன் கல்லூரி கொடுத்த கிளர்ச்சியில் நீதிக்கட்சிக்குள் இணைந்த பேரறிஞர் அண்ணா, பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் சூரியக் கதிர்களை வாங்கிச், நிலவொளியாய் பிரகாசித்தார்.
1944 பெரியார் தொடக்கிய திராவிடர் கழகத்தின் முன் வரிசைப் போராளியாக களம் கண்டார். நீதிக்கட்சியின் பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றி பெரியாரின் கொள்கைகளையும், திராவிடத்தின் சாற்றையும் தமக்குள் வாங்கிக் கொண்டார்.
கட்டுரை, கதை, கவிதை, சினிமா, மேடைப்பேச்சு என தான் தொட்ட துறைகளில் எல்லாம் பலகலை வித்தகராக வாழ்ந்த பேரறிஞர் அண்ணா, திராவிட இனத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே அயராது உழைத்தார். காலத்தால் ஏற்பட்ட முதிர்ச்சி, அண்ணாவை பெரியாரை மீறியும் செயல்பட வைத்தது.
ஆனால், அவர் கற்றுக்கொடுத்த சமத்துவம் என்கிற பால பாடம், அண்ணா வாயால் உச்சரிக்கும்போது சமூக நீதி என்றும் சேர்த்து ஒலித்தது. பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையின் அடிநாதம் உணர்ந்த அண்ணா, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று உணர்த்தினார்.
பெற்ற தாயையும் பிறந்த பொன்னாட்டையும் காத்தல் ஒன்றே கடமை என்பதை, பசுமரத்தில் பாய்ந்த ஆணியாய் தமக்குள் தைத்தார். அதன் பலனாக, தமது உழைப்பின் நம்பிக்கை ஒளியாக தமிழ்நாட்டின் முதலமைச்சரும் ஆனார்.
தமிழ்நாட்டில் காங்கிரஸார் அல்லாத முதல் முதலமைச்சர் அண்ணாதான். இந்தி எதிர்ப்பு போராட்டம், தமிழ்நாடு பெயர் சூட்டுதல் என்று தமிழ்நாட்டிற்கு அண்ணா அளித்த கொடைகள் அளந்து முடியாதவை, எழுதி நிறையாதவை.
கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு என்று காஞ்சியிலிருந்து கூவிய குரல், 1969 ல் அடங்கியபோது தமிழ்நாடு ஸ்தம்பித்தது. உலக சாதனை படைக்கும் அளவு உள்ளன்பு மிக்க மக்கள் திரண்டனர். அதுதான் ஒரு தலைவனுக்கு மரியாதை.. அதுதான் ஒரு மனிதனுக்கு அடையாளம்..
நியூஸ் ஜெ செய்திகளுக்காக விவேக்பாரதி
Discussion about this post