தமிழகத்தில் முதல்முறையாக காற்றாலைகள் மூலம் ஒரேநாளில் 5 ஆயிரத்து 70 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 8 ஆயிரத்து 468 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 11 ஆயிரத்து 800 காற்றாலைகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை காற்று பலமாக வீசும் என்பதால் இந்த காலகட்டத்தில் சராசரியாக 4 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக காற்றாலை மின்சாரம் அதிகளவில் உற்பத்தி ஆகிறது. கடந்த 17-ந் தேதி 4 ஆயிரத்து 589 மெகாவாட் மின்உற்பத்தியும், 18-ந் தேதி 4 ஆயிரத்து 169, 19-ந் தேதி 4 ஆயிரத்து 769 காற்றாலை மின்உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இதனிடையே, கடந்த 20 ஆம் தேதி அதிகபட்சமாக 5 ஆயிரத்து 70 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பருவக்காற்று வீசத் துவங்கியுள்ள நிலையில், காற்றின் வேகம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் மின் தேவையில் 3ல் ஒரு பங்கு மின்சாரம் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், அக்டோபர் மாதம் வரை காற்று நன்றாக வீசும் என்பதால், மின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post