இஸ்ரோவின் 5 செயற்கைகோள்களின் உதவியுடன் இந்திய வானிலை மையம், ஃபானி புயலை ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே கண்காணித்து வந்தது தெரிய வந்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்சாட்-3டி, இன்சாட்-3டிஆர், ஸ்காட்சாட்-1, ஓசன்சாட்-2 மற்றும் மெகா ட்ரோபிக்ஸ் ஆகிய செயற்கைகோள்கள் அளித்த தகவல்கள் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டதாகவும், இவைகள் ஃபானி புயலின் இருப்பிடம், நகர்வு ஆகியவற்றை உடனுக்குடன் அனுப்பியதாகவும் தெரிவிக்கப்படுள்ளது. புயல் சின்னம் 1000 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் போதே மழை மேகங்கள் குறித்த தகவல்களையும் செயற்கைகோள்கள் அனுப்பியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலையை கணிப்பதில் செயற்கைகோள்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும், புயல் சமயங்களில் சரியான வானிலை நிலவரங்களை கண்காணிக்க உதவியதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் உயிர்ச் சேதம் அதிகளவில் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.