ஒவ்வொரு 5 வினாடிகளுக்கும் ஒரு குழந்தை இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐ.நாவின் குழந்தைகள் நிதியம், உலக சுகாதார நிறுவனம், ஐ.நா மக்கள் தொகை பிரிவு மற்றும் உலக வங்கி இணைந்து சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வின் அறிக்கை இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் 15 வயதுக்கு உட்பட்ட 6.3 மில்லியன் குழந்தைகள், சரிசெய்யக்கூடிய சாதாரண காரணங்களினால் உயிரிழக்கின்றன.
1990-ஆண்டுக்கு பிறகு குழந்தைகள் இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும், இருப்பினும் இன்றும் குழந்தைகளின் உயிரிழப்பு தொடர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,ஆன் ,பெண் என இன அடிப்படையில் குழந்தைகள் இறப்பு அமைவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசியாவில் ஒரு குழந்தை இறந்தால் ஆப்பிரிக்காவில் 3 குழந்தைகள் இறப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், 2018-ல் இருந்து 2030-க்குள் 5 வயதுக்கும் குறைவான 56 மில்லியன் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் எனவும் அந்த ஆய்வுக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நல்ல உணவு, குடிநீர், மருத்துவம் ஆகியவை கிடைத்தாலே கணிசமான இறப்பை தவிர்க்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தொடர்பாக பேசிய உலக வங்கியின் சுகாதாரம் மற்றும் மக்கள் தொகை இயக்குனர் டிம் எவான்ஸ், குணப்படுத்தக்கூடிய காரணங்களால் ஏற்படும் மரணங்களை குறைத்தால் தான் நாட்டின் வளர்ச்சிக்கு அஸ்திவாரம் போட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.