4வது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்வில் 878 வீரர்கள் பங்கு பெற உள்ளனர். இதுகுறித்த ஓர் சிறப்புசெய்தித் தொகுப்பைக் காணலாம்.
தமிழக கிரிக்கெட் வீரர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையிலும், அவர்களது இலக்கை நோக்கிய பயணத்தில் பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது, தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் எனப்படும் டி.என்.பி.எல். இதை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்துகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த டியூட்டி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லிஸ், லைக்கா கோவை கிங்ஸ், சீக்கெம் மதுரை பேந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், விபி காஞ்சி வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐடிரீம் காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் மோத உள்ளன.
2016ம் ஆண்டு நடைபெற்ற முதல் தொடரை டியூட்டி பேட்ரியாட்ஸ் அணியும், இரண்டாம் தொடரை சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும் வென்றன. முதல் 2 தொடர்களில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட சீக்கெம் மதுரை பேந்தர்ஸ் அணி, 3வது தொடரை வென்றது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான 4வது டி.என்.பி.எல் தொடர் வரும் 19ல் நடைபெறுகிறது.
இதற்காக கிரிக்கெட் வீரர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று நடைபெறுகிறது. ஏலத்தில் மொத்தம் 878 வீரர்கள் பங்குபெற உள்ளனர். ஒவ்வொரு அணி சார்பாகவும் அதிகபட்சமாக 22 வீரர்களும், குறைந்தது 16 வீரர்களும் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவர். இதில் குறைந்தபட்சம் 2 மாவட்ட வீரர்கள் இடம்பெற வேண்டும்.
லீக் ஆட்டம் அட்டவணைப்படி, மொத்தம் 32 போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. அனைத்து அணிகளும் தலா ஒருமுறை சந்திக்க உள்ளனர். இப்போட்டிகள் திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.
இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏலம் முடிந்த பிறகு முழுமையான அணி விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன.
Discussion about this post