மதுரையில் மிகவும் பிரசித்திப்பெற்று விளங்கும் பர்மா பாட்டியின் இடியாப்பக் கடை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழகத்தின் கோவில் நகரம் என்று கொண்டாடப்படும் மதுரை, பல்வேறு சிறப்புகளுக்கு பெயர்பெற்றது. மீனாட்சி அம்மன் கோயில், குண்டு மல்லி, திருமலைநாயக்கர் மஹால் வரிசையில் பர்மா இடியாப்பக்கடையும் ஒன்று.
மதுரையில் இடியாப்பக் கடைகள் பல இருந்தாலும் மதுரை கீழவெளி வீதியில் உள்ள பர்மா இடியாப்ப கடைதான் பிரசித்தம். சுமார் 40 வருடங்களுக்கு முன்பு பர்மாவிலிருந்து இந்தியா வந்தவர் பிச்சையம்மாள் பாட்டி. இவர் தன்னுடைய 10 பேரக் குழந்தைகள் கொண்ட பெரிய குடும்பத்தை காப்பாற்ற வீதியோரத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்தக் கடை. பர்மாவில் இருந்து அனைத்தையும் இழந்து இந்தியா வந்த இவர்களை, இந்த தொழில்தான் காப்பாற்றியிருக்கிறது. பாட்டியின் பேரப்பிள்ளைகளில் ஒருவரான தேவிகாதான் தற்போது இதை நிர்வகித்து வருகிறார்.
வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததால் குடும்பத்தில் உள்ள அனைவரும் இத்தொழிலுக்கு உதவியாக இருந்துள்ளனர். பின்பு பிள்ளைகள் அனைவரும் முன்னேறி நல்ல நிலைமைக்கு வந்து விட்டாலும், தேவிகா இந்த இடியாப்ப கடையை கைவிடவில்லை. மேலும் இவர் கடைக்கு பின்புறம், மன்னர் திருமலை நாயக்கர் அரண்மனை உள்ளதால், சினிமா படப்பிடிப்பிற்கு வரும் அனைத்து திரை நட்சத்திரங்களுக்கும் இவர் கடையில் இருக்கும் இடியாப்பம் தான் விசேஷ உணவு. மதுரைக்கு வரும் முக்கிய விருந்தினர்கள் அனைவருக்குமே இவருடைய கடையிலிருந்து தான் இன்றுவரை இடியாப்பம் பார்சல் செல்கின்றது என்கிறார்
அரிசிமாவு இடியாப்பம் மற்றும் ராகிமாவு இடியாப்பம் என இரண்டு வகைகளாக தயாரிக்கப்படும் இடியாப்பத்திற்கு சீனி, தேங்காய்பால், நாட்டு சர்க்கரை, தேங்காய் துருவல், வெஜ் கிரேவி என்று சைடிஷ் கொடுக்கப்படுவதால், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு காணப்படுகிறது. அதுபோல பல காய்கறிகளை அரைத்து சட்டினி போல் வெஜ் கிரேவியாக கொடுப்பதும் இங்கு ஸ்பெஷல். இக்கடைக்கு சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
வருடக்கணக்கில் இங்கு வரும் வாடிக்கையாளர்கள் இடியாப்பத்தை சுவைத்து மகிழ்வதோடு மட்டுமல்லாமல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் சில்வர் பாத்திரங்களை கொண்டு வந்து பார்சல்களை வாங்கிச் செல்கின்றனர். பாஸ்ட் புட்டை தவிர்த்து இடியாப்பம் போன்ற இயற்கை உணவுகளை உண்பதால் உடலுக்கு எந்த தீங்குமின்றி ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர் வாடிக்கையாளர்கள்.
இடியாப்ப சிக்கலுடன் பர்மாவில் இருந்து மதுரைக்கு வந்த பாட்டியும், மகளும் சுய தொழில் மூலம் 10 பிள்ளைகளை வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டுவந்துள்ளனர். தற்போது நான்காவது தலைமுறையாக இடியாப்ப வியாபாரம் தொடர்கிறது. குடும்பத்தை காப்பாற்ற தொடங்கப்பட்ட கடை தற்போது மதுரையின் அடையாளமாக திகழ்வது இவர்களது உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம்.
Discussion about this post