உலகின் மாபெரும் சுயசிந்தனையாளர், ஒட்டுமொத்த மனித இனத்துக்குமான போராளியாக அறியப்படுபவர் தந்தை பெரியார். பகுத்தறிவு பகலவன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் பெரியாரின் நினைவு தினத்தில், அவரைப் பற்றிய சிறப்புகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்…
1879 ஆம் ஆண்டு ஈரோட்டில் பெரும் செல்வந்தர் குடும்பத்தில் ஈ.வெ.ராமசாமியாக பிறந்து, தனது இளம் வயதிலேயே சமூக வேறுபாடுகளைக் கண்டு மனம் கொந்தளித்து பெரியாராக உருமாறினார்.
அதனை தொடர்ந்து சமூக சீர்த்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடம் இருந்து களைவதற்காகவும் தீவிரமாக களமாடினார். மேலும், பெண் விடுதலை, சாதி, பாலின சமத்துவம், தீண்டாமையை ஒழித்தல் போன்ற கொள்கைக்காகவும் போராடினார்.
கலப்பு திருமணம், விதவை மறுமணம் ஆகியவற்றை ஊக்கப்படுத்திய பெரியார், தனது கொள்கைகளை மக்களிடம் முழுமையாக கொண்டு சேர்க்க குடியரசு நாளிதழை தொடங்கினார். வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் பெரியாரின் வைக்கம் போராட்டம், இந்தி எதிர்ப்பு போராட்டம், மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தின.
சுயமரியாதை இயக்கம் தோற்றுவிப்பு, நீதிக் கட்சித் தலைவர், திராவிடர் கழகம் என பெரியாரின் பங்களிப்புகள் ஏராளம். அதேபோல் தந்தை பெரியார் செய்த தியாகங்கள், போராட்டங்களால் அவர் பெற்றுத் தந்த இடஒதுகீட்டால் தமிழினம் கல்வியின் முன்னோடியாக திகழ்கிறது என்றால் அது மிகையாகாது.
எந்த விதத்திலும் தனது கொள்கைகளை சமரசம் செய்துகொள்ளாமல் ஒட்டுமொத்த மனித இனத்துக்காகவும் தனது வாழ்க்கையை தியாகம் செய்த பெரியார் உயிர் நீத்தாலும்; அவரது கொள்கைகளும் அவர் விதைத்த சமூக சீர்த்திருத்தங்களும் இன்று மட்டுமல்லாமல் என்றைக்கும் உயிர்ப்புடன் இருக்கும் என்பதே நிதர்சனம்!!.
“மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை
வானம் உள்ளவரை வையம் உள்ளவரை
யார் இங்கு மறப்பார் தந்தை பெரியாரை”
Discussion about this post