40 ஆண்டுகளுக்கு பிறகு அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் எழுந்தருளினார். ஜூலை ஒன்றாம் தேதி முதல் 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ள நிலையில், அத்திவரதரின் சிறப்பு குறித்து விவரிக்கிறது இந்த சிறப்பு தொகுப்பு…
கோயில்களின் நகரமான காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் இரண்டு குளங்கள் உள்ள நிலையில், அனந்தசரஸ் குளத்தில் அத்திவரத பெருமாள் சயனித்துள்ளார்.
குளத்தின் உள்ளே வெள்ளிப்பேழையில் சயனித்து வரும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளிக் கொண்டு வரப்பட்டு, 48 நாட்களுக்கு பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படுகிறார். 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற அத்திவரதர் தரிசன விழாவிற்கு பின்னர், நடப்பு ஆண்டில் இந்த விழா நடைபெற உள்ளது. இதற்காக அனந்தசரஸ் குளத்திலிருந்த நீர், மீன்கள் கிழக்கு கோபுரம் அருகே உள்ள பொற்றாமரைக் குளத்துக்கு மாற்றப்பட்டன. அத்திவரதர் சயனித்து இருக்கும் நான்கு கால் மண்டபத்துக்குக் கீழ் உள்ள பகுதியில் நீர் வெளியேற்றும் பணி வெள்ளிக்கிழமை நள்ளிரவு துவங்கியது. முதலில் நீரை வெளியேற்றி, பின்பு சகதி அகற்றப்பட்டது. இதையடுத்து, அதிகாலையில், அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டார்.
13 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்ட அத்திவரதரை ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்டு 17ஆம் தேதி வரை தொடர்ந்து 48 நாட்கள் பக்தர்கள் தரிசிக்கலாம். ஒன்றாம் தேதி முதல் 30 நாட்களுக்கு சயன நிலையிலும், அடுத்த 18 நாட்களுக்கு நின்ற நிலையிலும் அத்திவரதர் காட்சியளிப்பார். காலை 6 மணி முதல் பகல் ஒரு மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசிக்கலாம். சிலைக்கு கற்பூர ஆரத்தியோ, தீபாராதனையோ காட்டப்படாது. பூக்களால் அர்ச்சனை மட்டுமே செய்யப்படும். பட்டு சார்த்தி வழிபாடு நடத்தப்படும்.
உள்ளூர்,வெளியூர் என இருவகையான பக்தர்களும் தரிசிக்க தனித்தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் பக்தர்கள் ஜூலை 1, 2, 3, ஆகிய நாட்களிலும், 12 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலும், ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரையிலும், பின்னர் ஆகஸ்டு 16, 17 ஆகிய தேதிகளிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை மட்டுமே தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். உள்ளூர் பக்தர்கள், தரிசனத்திற்காக டிக்கெட்டுகள் பெற காஞ்சிபுரத்தில் 8 இடங்களிலும், சிறுகாவேரிபாக்கம், கோவிந்தவாடி, திருப்பூங்குழி, சித்தியம் பாக்கம் ஆகிய ஊர்களிலும், மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வெளியூர் பக்தர்கள் தரிசிக்க தர்ம தரிசனம், 50 ரூபாய், 500 ரூபாய் என மூன்று விதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தர்ம தரிசனம் செய்வோர் கோவிலின் கிழக்கு கோபுரம் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள். கட்டண தரிசனம் செய்ய விரும்புவோர், http://www.kanchivaradarajartemple.com/home.html என்ற கோவிலின் இணைய தள முகவரியில் சென்று முன் பதிவு செய்யலாம்.
பெயர், ஆதார் எண், ஆகியற்றை பதிவு செய்து, தேவையான கட்டணத்திற்கான ரூபாயை செலுத்தினால், பக்தர்கள் விரும்பும் தேதியில் தரிசனம் செய்ய இணையதளம் வழியே டிக்கெட் அளிக்கப்படும்.அத்திவரதர் திருவிழாவிற்காக தமிழக அரசால் 29 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பல்வேறு துறைகளின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் பக்தர்கள் வருவார் என்று திட்டமிட்டு அதற்கு ஏற்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 2 ஆயிரத்து 500 போலீசார் ஈடுபட உள்ளனர். கோவிலைச் சுற்றிலும், நூறு மீட்டர் இடைவெளியில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்டு 17ஆம் தேதி வரை காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மட்டுமே இயங்கும் என்று ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
பக்தர்கள் வசதிக்காக 100 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 4 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, கோவில் உட்பிரகாரத்தில் நான்கு ஆம்புலன்ஸ்களும், கிழக்கு மற்றும் மேற்கு கோபுரங்களுக்கு அருகில் தற்காலிக சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.