கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 40க்கும் அதிகமான நாடுகள் நேசக்கரம் நீட்டியுள்ளன.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் உள்ளிட்டவைகளின் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து, இந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் ஷிரிங்கலா தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் இருந்து ராணுவ விமானம் மூலம் 20 ஆக்சிஜன் டேங்குகள், வெண்டிலேட்டர்கள், 2 லட்சம் மருந்து பொட்டலங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் இருந்து 3 சிறப்பு விமானங்கள் மூலம் ஆக்சிஜன், மருந்து பொருட்கள் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 40க்கும் அதிகமான நாடுகள் இந்தியாவுக்கு உதவி வருவதாக தெரிவித்தார். மேலும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் அங்கிருந்து இந்திய மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post