ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் உள்ள 15வது கொண்டை ஊசி வளைவில், லாரி பழுதாகி நின்றதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த திம்பம் மலைப்பாதை, 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. இது சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையாகவும் அமைந்துள்ளது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து பாரம் ஏற்றிய லாரி ஒன்று திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. 15வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்ற போது, அந்த லாரி திடீரென பழுதாகி நின்றதை அடுத்து, தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணி வகுத்து நிற்கத் தொடங்கியது. இதனால் தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து காவல் துறையினர், போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கபட்டது.
Discussion about this post